திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 09:03 AM | Last Updated : 19th May 2019 09:03 AM | அ+அ அ- |

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரமோத்ஸவ விழாவையோட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா மே 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் காலை தங்கப் பல்லக்கில் திருமேனி சேவையும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை 13-ஆம் தேதியும், தங்கப் பல்லக்கில் வெண்ணைத் தாழி உத்ஸவம் 17-ஆம் தேதியும் நடைபெற்றது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, சௌரிராஜப் பெருமாள் மற்றும் உபநாச்சியார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டது.
கோயிலின் செயல் அலுவலர் கா. பரமானந்தம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர், நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.