பள்ளி வாகனங்கள் ஆய்வு: 10 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
By DIN | Published On : 19th May 2019 09:05 AM | Last Updated : 19th May 2019 09:05 AM | அ+அ அ- |

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி வாகனங்களின் ஆய்வில், 10 வாகனங்களின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் ஆகியோர் வாகனங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பான்கள், இருக்கைகள், மாணவர்களின் புத்தகப்பைகள் வைக்கும் இடங்கள், வாகனத் தளம், படிக்கட்டுகள், கதவுகள், அவசர வழிக் கதவுகள், ஓட்டுநரின் தகுதி, உரிமம் மற்றும் அவரது அனுபவம், உதவியாளரின் தகுதி, வாகனத்தின் அனுமதிச் சான்று, நடப்பிலுள்ள காப்பீட்டுச் சான்று, மாசுக்கட்டுப்பாட்டு தரச்சான்று உள்பட 20 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தது: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சொந்தமான 444 வாகனங்களில் 380 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 345 வாகனங்களுக்குத் தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 25 வாகனங்களில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, குறைகளைக் களைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 வாகனங்களின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 64 வாகனங்கள் தற்போது பணிமனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களும், குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களும் பழுது நீக்கம் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தகுதிச் சான்று பெற்ற பின்னரே, இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.
பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், மது அருந்து பழக்கம் கொண்டவர்களை பள்ளி வாகன ஓட்டுநர்களாக நியமிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், மாவட்டக் காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) எஸ். அழகிரிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.