மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 09:03 AM | Last Updated : 19th May 2019 09:03 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. தொன்மையும், பிரசித்தியும் பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் பஞ்சமூர்த்திகளின் திருவீதிஉலா நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணி அளவில் மாயூரநாதர், அபயாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். பின்னர், மாலை 5 மணி அளவில், தேர் வடம் பிடிக்கப்பட்டது.
கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலின் வடக்கு வீதியில் புதைச்சாக்கடை உடைப்பு காரணமாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால், நிகழாண்டு தேரின் சுற்றளவு குறைக்கப்பட்டிருந்தது.
இவ்விழாவில் தெப்ப உத்ஸவம் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 22-ஆம் தேதி யதாஸ்தானம் எனப்படும் பஞ்சமூர்த்திகள் இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது.