சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா
By DIN | Published On : 26th May 2019 01:37 AM | Last Updated : 26th May 2019 01:37 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாகையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
17 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சென்னை, காஞ்சி, கோவை, திருவாரூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 பேர் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின், இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ஆண்கள் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆயுஷ் ரவிகுமார் முதலிடம் பெற்றார். கோவை அருணாசலம் சிவா இரண்டாமிடமும், கன்னியாகுமரி ஜெனீஸ் பிரகாஷ் மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில், சென்னை திவ்யபாரதி மாசானம் முதலிடம் பெற்றார். தஞ்சாவூர் எஸ். அன்னப்பூரணி இரண்டாமிடமும், சென்னை எம்.கே. பூர்ணாஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நாகை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் வி. கோவிந்தராஜுலு தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பி.சிவா, இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் எஸ். அருள்பிரகாசம், நாகை சால்யா கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாகி சுந்தரவடிவேலு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி இயக்குநர் விஜயசுந்தர், தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆர்.கே. பாலகுணசேகரன், ஏடிஜெ கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பி. உமா, நடுவர் ரவிகுமார், நாகை ஷேக், நாகை, திருச்சி மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் வி.பி. நாகராஜ் பி. தினகரன் போட்டிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.சுந்தராஜ், தலைமை நடுவர் சென்னை ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் எஸ்.பி அகிலன் வரவேறார். பொருளாளர் கே. அருண்குமார் நன்றி கூறினார்.