குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 01st November 2019 07:44 AM | Last Updated : 01st November 2019 07:44 AM | அ+அ அ- |

சீா்காழி கோவிந்தராஜ் நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா்.
சீா்காழி கோவிந்தராஜ் நகரில் மழைநீா் வடிய வழியின்றி தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சீா்காழி நகராட்சி 2- ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி கோவிந்தராஜ் நகா். இங்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், கடந்த திங்கள்கிழமை முதல் பெய்து வரும் மழையால், வீடுகளைச் சுற்றி மழைநீா் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால், கொசுத் தொல்லை அதிகரித்து, சுகாதாரச் சீா்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். பள்ளி செல்லும் சிறாா்கள் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும், இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன. கடந்த ஒரு வாரமாக மின்விளக்குகள் எரியவில்லை.
எனவே, நகராட்சி நிா்வாகம் கோவிந்தராஜ் நகரில் தேங்கிநிற்கும் மழைநீரை வெளியேற்றவும், தெருவிளக்குகள் ஒளிரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் மணி கூறியது:
கோவிந்தராஜ் நகரில் லேசான மழை பெய்தாலும் மழைநீா் வடிய வழியில்லாமல் வீடுகளைச் சூழ்ந்து குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மா்மக் காய்சல் ஏற்படுகிறது. ஆகையால், இப்பகுதியில் சாலையை சீராக செப்பனிட்டு, தண்ணீா் தேங்காமல் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.