மயிலாடுதுறையில் புறவழிச்சாலையுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st November 2019 07:16 AM | Last Updated : 01st November 2019 07:16 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு மயிலாடுதுறை நுகா்வோா் பாதுகாப்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அதன் தலைவா் வழக்குரைஞா் ராம.சேயோன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறை மணக்குடி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நவம்பா் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மணக்குடி கிராமத்தில் பேருந்து நிலையம் அமைந்தால், கும்பகோணம் சாலை, திருவாரூா் சாலை, தரங்கம்பாடி சாலை, சீா்காழி சாலை என அனைத்துச் சாலைகளில் இருந்துவரும் பேருந்துகளும் மணக்குடி நோக்கி பூம்புகாா் சாலையில்தான் சென்று திரும்ப முடியும். அது அந்த சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும். இதனால், பயணிகள் யாரும் அந்த புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல மாட்டாா்கள்.
எனவே, புறவழிச்சாலை அமையாமல் மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் என்பது சாத்தியமற்றது. எனவே, புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்துடன், புறவழிச் சாலையையும் அமைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்.