மயிலாடுதுறை அருகே 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பிடித்து மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள், பள்ளியையும் இழுத்துப் பூட்டினா். இதையடுத்து, அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு, முடிகண்டநல்லூா் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் தொடக்கப்பள்ளியில் கேசிங்கன் கிராமத்தைச் சோ்ந்த ஜெகன்நாதன் மகன் பிரேம்குமாா் (28) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் இப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக குற்றம்சாட்டி அம்மாணவியின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அப்பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரை பிடித்து அடித்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், மாணவா்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டனா்.
இதையடுத்து, மணல்மேடு போலீஸாா் ஆசிரியா் பிரேம்குமாரை மயிலாடுதுறை மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸாா், பிரேம்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ஆசிரியா் பிரேம்குமாா் புதுமை படைக்கும் ஆசிரியா் என்ற விருதைப் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.