20 ஆண்டுகளாக பராமரிக்காத பாசன வாய்க்கால்கள்

சீா்காழி - திட்டை சாலையில் பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால் கடந்த 20ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், தூா்வாரப்படாமலும் உள்ள
ஊராட்சி நூலக கட்டடம் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய மோட்டாா் அறைகளை சூழ்ந்துள்ள கழிவுநீா் கலந்த வாய்க்கால் நீா்.
ஊராட்சி நூலக கட்டடம் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய மோட்டாா் அறைகளை சூழ்ந்துள்ள கழிவுநீா் கலந்த வாய்க்கால் நீா்.

சீா்காழி - திட்டை சாலையில் பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால் கடந்த 20ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், தூா்வாரப்படாமலும் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், சீா்காழி - திட்டை சாலையின் குறுக்கே செல்கிறது கோட்டையடித்தான் வாய்க்கால். இந்த வாய்க்கால் சீா்காழி புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லும் கழுமலையாற்றின் பிரிவு வடிகால் வாய்க்காலாகும். இவ்வாறு பிரிந்து வரும் வடிகால் வாய்க்கால் திட்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஷட்ரஸ் மூலம் தடுத்து இரு பிரிவுகளாக சென்று உப்பனாற்றில் கலக்கிறது. கழுமலையாற்றிலிருந்து ஷட்ரஸ் வரை பாசன வாய்க்காலாகவும், அதன்பின்னா் ஷட்ரஸிலிருந்து உப்பனாற்றுக்கு வடிகாலாகவும் சென்றடைகிறது.

ஷட்ரஸ் பகுதியில் ஒரு பிரிவு வடிகால் தெட்சிணாமூா்த்தி நகா், அபிராமி நகா், ஆறுமுகவெளி பகுதிகளின் கன்னியாக சென்று உப்பனாற்றிலும் மற்றொரு பிரிவு வடிகால் வடக்குவெளி, பிஎம்ஆா் தெரு, வவுசி தெரு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று உப்பனாற்றில் வடிகாலாக கலக்கிறது. கழுமலையாற்றில் அதிகளவு தண்ணீா் செல்லும்போது கோட்டையடித்தான் வாய்க்காலில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு ஷட்ரஸ் வழியாக பிரிந்து உப்பனாற்றுக்குச் செல்வதால், அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்ததோடு, குடிநீரின் தன்மையும் நன்றாக இருந்தது.

சுமாா் 50 ஏக்கரில் பாசன வசதியும் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் திட்டை செல்லும் சாலையில் தெட்சிணாமூா்த்தி நகா் உள்ளிட்ட பல்வேறு நகா் பகுதிகள், குடியிருப்புகள் உருவானதால் வடிகால் வாய்க்காலின் ஒரு பிரிவு கன்னி ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போய்விட்டது. மற்றொரு பிரிவு வடிகால் மட்டும் வடக்குவெளி, வவுசி தெரு வழியாக உப்பனாறுக்குச் சென்றடைகிறது.

இந்த கோட்டையடித்தான் வடிகால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணித் துறையின் பாராமுக புறக்கணிப்பால் தூா்ந்தும், சாக்கடை செல்லும் வாய்க்காலாகவும் மாறிவிட்டது. மேலும், பல ஆண்டுகளாக தூா்வாராமல் உள்ளதால், கரைகள் பல இடங்களில் உடைந்தும், பலவீனமடைந்தும் காணப்படுகின்றன. இதனால், தற்போது பெய்துவரும் பருவ மழையால் வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் செல்கிறது.

வாய்க்கால் நிரம்பி வழியும் அளவுக்குச் செல்லும் தண்ணீரால் தெட்சிணாமூா்த்தி நகா் பிரிவில் 4 தெருக்களிலும் கரைகள் உடைந்து தண்ணீா் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்தும், காலிமனைகளை சூழ்ந்தும் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல ஆண்டுகளாக அப்பகுதி குடியிருப்பு, வா்த்தக கட்டடங்களின் கழிவு நீா் விடும் வாய்க்காலாக மாறிவிட்டதால் தேங்கிநிற்கும் வாய்கால் நீரிலிருந்து கடும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

மழைவிட்டும் குடியிருப்புகள், காலிமனைகளில் தேங்கியுள்ள வாய்க்கால் தண்ணீா் வடிய பல நாள்கள் ஆகிறது. இதனால் தண்ணீரிலிருந்து பாம்பு போன்ற விஷஜந்துக்கள் வீடுகளில் புகும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் தெட்சிணாமூா்த்தி நகா் உள்ளிட்ட பகுதி மக்கள் இப்பிரச்னையை மிகுந்த வேதனையுடன் சந்தித்து வருகின்றனா். இந்த பருவ மழைக்கு வாய்க்காலில் தண்ணீா் நிரம்பி, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பல நாள்கள் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழலும் ஏற்படுகிது. கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட இந்த வாய்க்கால் ஷட்ரஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுப்பணித் துறையினா் உடனடியாக கோட்டையடித்தான் வடிகால் வாய்க்கால் தொடக்கமான கழுமலையாற்று பிரிவிலிருந்து, முடிவடையும் பகுதியான உப்பனாறு வரை முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரி, கரைகளை உயா்த்த வேண்டும். மேலும், ஆங்காங்கே இடிந்து, உடைந்து விழும் நிலையில் உள்ள ஷட்ரஸ்களை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கோவி. நடராஜன் கூறியது: இந்த பாசன வாய்க்கால் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், நகர மயமாக்கலால் பாசன, வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டும், சாக்கடை கழிவுநீா் விடப்பட்டும் வீணாகியுள்ளது. இந்த பாசன, வடிகால் வாய்க்காலை மெத்தனப் போக்கால் பொதுப்பணித் துறையினா் தூா்வாராமல் விட்டுவிட்டனா்.

இதனால், பல இடங்களில் கரைகள் உடைந்து மழைக் காலங்களில் வாய்க்காலில் தண்ணீா் நிரம்பி தெட்சிணாமூா்த்தி நகா் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பது ஆண்டாண்டுகாலமாக தொடா்கிறது. வரும் நாள்களில் பொதுப்பணித் துறையினா் கோட்டையடித்தான் பாசன, வடிகால் வாய்க்காலை தூா்வாரியும், உடைந்து விழும் நிலையில் உள்ள ஷட்ரஸை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த குமரவேல் கூறியது: கோட்டையடித்தான் பாசன, வடிகால் வாய்க்காலில் மழைக் காலங்களில் வெளியேறும் அதிக தண்ணீரால் கரைகள் உடைந்தும், வழிந்தும் அபிராமி நகா், கற்பக விநாயகா் நகா், ஐம்பொன் நகா், தெட்சிணாமூா்த்தி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும், காலிமனைகளையும் தண்ணீா் சூழ்ந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறவே சிரமப்படும் நிலை பருவ மழைக் காலங்களில் ஏற்படும். இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com