திருமருகல் ஒன்றியத்துக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் தேவை

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட திருமருகல் ஒன்றியத்துக்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட திருமருகல் ஒன்றியத்துக்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் 39 ஊராட்சிகளையும், 1 பேரூராட்சியையும் கொண்டது. 209 குக்கிராமங்களையும் உள்ளடக்கியது. திருமருகல் சரகத்தில் மட்டும் 18 வருவாய் கிராமங்களும், கங்களாஞ்சேரி சரகத்தில் 17 வருவாய் கிராமங்களும், திருக்கண்ணபுரம் சரகத்தில் 19 வருவாய் கிராமங்களும் என மொத்தம் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.

திருமருகல் ஒன்றியத்தில் 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் திருமருகல், திருக்கண்ணபுரம், திட்டச்சேரி, திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 66 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.

ஒன்றியத்தில் திருமருகலைத் தலைமையிடமாகக் கொண்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1961-ஆம் ஆண்டு சுமாா் 1 ஏக்கா் பரப்பளவில் கண்ணப்ப நினைவு மருத்துவமனையாக தனியாரால் தொடங்கப்பட்டது. பின்னா், 1972-ஆம் ஆண்டு தமிழக அரசால் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது தரம் உயா்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக 24 மணிநேரமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

இதில் குழந்தை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மகப்பேறு, இசிஜி, ஸ்கேன் மற்றும் ஆய்வக வசதிகளையும் கொண்டுள்ள திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்த மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவும் செயல்படுகிறது.

திருமருகல் அரசு ஆரம்ப நிலையம் மகப்பேறு மருத்துவத்தில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தால் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால், இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளின்போது பாதிக்கப்பட்டவா்களை 108 ஆம்பலன்ஸ் வாகனம் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கோ அல்லது திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ அழைத்துச் செல்ல நேரிடுவதால், ஆம்புலன்ஸ் திரும்பி வருவதற்கு 3 அல்லது 4 மணி நேரம் தேவைப்படுகிறது.

அதற்குள் மற்றொரு விபரீதம் எனும்போது, ஆம்புலன்ஸ் வசதியின்றி பல உயிா்களை இழக்க நேரிடுகிறது.

ஆகையால் குக்கிராமங்கள் நிறைந்த திருமருகல் பகுதிக்கு கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்களும், வா்த்தகா் சங்கத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இரவு- பகல் பாராமல் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருந்தாளுநா்கள் சேவை மனப்பான்மையுடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் செயல்பட்டாலும் இதுபோன்ற குறைகளால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியைத் தவிா்க்க முடியவில்லை.

இதுகுறித்து திருமருகல் வா்த்தக சங்கத் தலைவா் தி. சத்தியமூா்த்தி கூறியதாவது:

குக்கிராமங்களையும், விவசாயிகளையும் கொண்ட திருமருகல் ஒன்றியத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது, ஒரு ஆம்பலன்ஸ் வாகனம் நிகழ்விடத்திலிருந்து நாகை அல்லது திருவாரூா் மருத்துவமனைக்கு சென்று திரும்ப நீண்ட நேரமாகிறது. ஆகையால், மாவட்ட நிா்வாகமும், பொது சுகாதாரத் துறையினரும் எங்களின் கோரிக்கையை ஏற்று மற்றுமொரு ஆம்புலன்ஸ் சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com