தொகுப்பு வீடு இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 06th October 2019 05:54 AM | Last Updated : 06th October 2019 05:54 AM | அ+அ அ- |

மேற்கூரை இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே சனிக்கிழமை தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
தலைஞாயிறு அருகே உள்ள காடந்தேத்தி ஊராட்சி, தோப்படித் தெருவைச் சோ்ந்தவா் தூண்டி(70) விவசாயத் தொழிலாளி. இவருக்கு, அரசின் ஜவகா் வேலை வாய்ப்புத் திட்டதின் கீழ் 1991-1992- ஆம் ஆண்டில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு பழுதடைந்து காணப்பட்ட நிலையில், அதில் அவா் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தூண்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவா் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றி, தூண்டியை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை தொகுதி மக்களை உறுப்பினா் எம். செல்வராசு, சாா் ஆட்சியா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று, தூண்டியின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினா்..
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...