தோப்புத்துறை மனைப்பட்டா விவகாரம்: அமெரிக்காவில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 11th September 2019 06:59 AM | Last Updated : 11th September 2019 06:59 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட தோப்புத்துறை பகுதியில் இந்து, இஸ்லாமிய குடும்பங்களின் குடியிருப்பு மனைப் பட்டா வகைபாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி கலிபோர்னியாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அமெரிக்கா சுற்றுப் பயணத்தின்போது முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தோப்புத்துறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், அமெரிக்கா வாழ் சமூக ஆர்வலரும், அல் நூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனத் தலைவருமான அ. முகம்மது நூர்தீன் அளித்த கோரிக்கை மனு விவரம்: வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்து, இஸ்லாமிய குடும்பத்தினர் வசிக்கும் மனைகளுக்கான புல எண் 570 பட்டா சில காலங்களுக்கு முன்பு அரசு அ அட்டவணை கணினி பிரிவில் இருந்து நீக்கி அரசு புறம்போக்கு மனை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போரட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுக்கு அடைகலம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்த இடமாகவும், பல இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும், இறைநேசர்கள் அடக்கம் செய்யப்பட்ட தர்ஹாகள் இந்த மனை பிரிவில்தான் வருகிறது. இந்த மனையில் வசிக்கும் மக்கள் தங்களது பெயரில் பட்டா இல்லாத காரணத்தினால் பெரும் துயரத்திலும், கஷ்டத்திலும் இருந்து வருகிறார்கள்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கணினி சிட்டா அடங்கல் இல்லாமல் கைப்பட எழுதப்பட்ட சிட்டா அடங்கல் கொடுக்கப்பட்டு, மின்வாரிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பதிவுத்துறை சார்ந்த எந்த பணியும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இருப்பினும், தமிழக அரசின் சிறப்பு அரசு ஆணை மூலமே இந்த மனையில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்துக்கும் நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க முடியும் என்ற நிலையில் இருக்கிறது.
எனவே, தோப்புத்துறையில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, கோரிக்கை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.