சுடச்சுட

  

  எலும்பு முறிவு: சித்த வைத்தியத்தில் அசத்தும் விடங்கலூர் வைத்தியர்..!

  By DIN  |   Published on : 12th September 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thiruvarur

  நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள விடங்கலூர் ஸ்ரீலலிதாம்பாள் சித்த வைத்தியசாலை ராமசாமி வீடு என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம். இவரது தாத்தா, அப்பா ஆகியோர் சுமார் நூறு ஆண்டுகளாக சித்த வைத்தியத்தில் எலும்பு முறிவுக்கு சிகிச்சையளித்து வந்தனர். அவர்களை தொடர்ந்து ராமசாமியும் 3-ஆவது தலைமுறையாக 1994 முதல் 25 ஆண்டுகளாக சித்த வைத்தியத்தில் எலும்பு முறிவு சிகிச்சையளித்து வருகிறார்.
  யாருக்கேனும் எலும்பு முறிவு ஏற்பட்டால்  முறிவு ஏற்பட்ட இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலும், அனுபவமும் பெற்றுள்ளார். சிகிச்சையளிக்கும் போது எலும்பு முறிவுக்கு தகுந்தவாறு மூங்கில் டப்பைகளை வைத்து துணியால் கட்டி, அதன் மீது விடங்கலூர் சிறப்பு எண்ணையை ஊற்றி விடுவார். பாதிக்கப்பட்டவருக்கு வலி ஏற்படும் போதெல்லாம் கட்டுபோட்ட இடத்தில் எண்ணெய்யை ஊற்றும்படி கூறி அனுப்பிவார். மேலும் வலி அதிகமாக இருந்தால் வைத்தியசாலைக்கு வந்து சென்று சிகிச்சை பெற்று செல்ல அறிவுறுத்துகிறார். 
  எலும்பு முறிவு எப்படிபட்ட நிலையில் இருந்தாலும், இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றால் எலும்பு கூடிவிடும் என்று கூறும் ராமசாமி அதை நிரூபித்தும் உள்ளார். சில சமயங்களில் பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறிய பிறகு எலும்பைக் கவனிக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். அதற்குள் எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அதை அப்படியே விட்டு விடுவார். அதற்கு மாறாக எலும்பு எசகு பிசகாக ஒட்டி இருந்தால், அவ்வாறு சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுகிறார். 
  வளர்ந்து வரும் நவீன மருத்துவ முறையில் பலர் நாட்டு வைத்தியத்தை கைவிட்ட போதிலும், பணத்துக்காக வைத்தியம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு 24 மணி நேரமும் வைத்தியம் பார்த்து வருகிறார் இவர். வைத்தியம் பார்க்க வருவோரிடம் ஆலோசனை கட்டணம் எதுவும் வாங்குவது கிடையாது. கட்டுப் போட்டால் மட்டுமே ரூ. 50 வாங்கி வருகிறார். இங்கு நாள்தோறும் சராசரியாக 80 முதல் 90 பேர் பல்வேறு பகுதிகளிருந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர்.
  இந்த வைத்தியசாலையில் மூட்டுத் தேய்மானம், ரத்தக்கட்டு கரைப்பு, எலும்பு முறிவு, உடல் வலிக்கான நிவாரணி என பல பிரச்னைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் எண்ணெய் கிராமப் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.100 மி.லி எண்ணெய் தயாரிக்க ரூ 30 வரை செலவாகிறது என்றாலும், 100 மி.லி ரூ. 50, 200 மி.லி ரூ. 100 என்ற குறைந்த விலையில் விற்று வருகிறார். விடங்கலூர் எண்ணெய் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  நாட்டு வைத்தியரான இவர் குறைந்த செலவில் வைத்தியம் செய்து கொண்டிருந்தாலும் எலும்பு முறிவை துல்லியமாக படமெடுக்கும் எக்ஸ்-ரே கருவிகள் வாங்கி வைத்து, அதை இயக்க தகுதியானவரை நியமித்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு படம் எடுத்து பார்க்க வேண்டுமெனில் அப்பணியையும் செய்து வருகிறார். எக்ஸ்ரே 10-8 அளவுக்கு ரூ. 150, 10-12 அளவுக்கு ரூ. 170 மட்டுமே பெற்று கொள்கிறார். அறுவைச் சிகிச்சை செய்தால் தான் எலும்பு முறிவு சரியாகும் என்று மருத்துவர்கள் கூறிய பிறகும்கூட விடங்கலூரில் வைத்தியம் பார்த்தவர்களுக்கு குணமாகியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இவரிடம் எலும்பு முறிவு ஆலோசனை பெற விரும்புவோர் 9585491057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  விடங்கலூர் வைத்தியசாலை மூலம் பயன்பெற்ற இளைஞர் சஞ்சய் குமார் கூறியது: 2018-ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஹாக்கி விளையாட்டுக்காக நாள்தோறும் மாலையில் கல்லூரி வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு முறை கால் நரம்பில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்தேன். ஒரு வாரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியும் இருந்தது. இந்நிலையில், நாகையில் நரம்பியல் மருத்துவரை அணுகியபோது அவர் 10 நாள் ஓய்வு எடுத்தால் மட்டுமே சரியாகும் என்றார். இதற்கிடையில், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எப்படியேனும் குணப்படுத்த வேண்டும் என்று விடங்கலூர் வைத்தியரை அணுகினேன். அவர் சுளுக்கு எடுத்து எண்ணெய் போட்டு விட்டார் . அன்றிலிருந்து 3-ஆவது நாள் சுளுக்கு சரியாகி போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai