திருவிடைமருதூர் கட்டளைத்தம்பிரான் பதவி நீக்கம்: திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்
By DIN | Published On : 22nd September 2019 05:01 AM | Last Updated : 22nd September 2019 05:01 AM | அ+அ அ- |

திருவிடைமருதூர் கட்டளைத் தம்பிரான் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து திருவாவடுதுறை ஆதீனம் விளக்கமளித்துள்ளார்.
நாகை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்துக்குச் சொந்தமாக தமிழகம் மட்டுமின்றி, காசி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆலயங்களும், கிளை மடங்களும் உள்ளன. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான். இவர், உடல்நிலை சரியில்லை என்று ராஜினாமா செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் உத்திராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன.
இதுகுறித்து, ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதீன மரபுகளை இவர் மீறியதாகவும், இவருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காவி உடை இல்லாமல், வெள்ளை உடையில் கட்டளைத்தம்பிரான் இருக்கும் புகைப்படமும் ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், காசி சென்று அங்கிருந்து, மீண்டும் காவி உடை அணிந்தபடி, ஆடியோ ஒன்றை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் தன்னை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக குற்றம்சாட்டி பேசியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான் ஈரோட்டை சேர்ந்தவர். அவர், தீட்சை பெறுவதற்கு முன்பே ஒரு ஊமைப் பெண்ணை திருமணம் செய்தவர். மடத்தில் இருந்தாலும், அவ்வப்போது வீட்டுக்குச் சென்று வந்தார். முழுமையாக துறவரம் மேற்கொள்ளவில்லை. மேலும், உடல்நிலை சரியில்லை என்று கூறிவந்தார். இதனால், அவரது ஊரைச் சேர்ந்த சிலரை நேரில் வரவழைத்து விசாரித்து, அவரை வெளியேற்றினோம். ஆதீனத்தின் கட்டளையை மதிக்காமல் காசி சென்று மீண்டும் காவி உடை அணிந்துள்ளார். அவர் குருத் துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.