ரூ. 4 கோடி ஒதுக்கீடு: கிடப்பில் பாலம் கட்டும் பணி; 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் மக்கள்

திருமருகல் அருகே தெற்கு புத்தாற்றில் புதிய பாலம் கட்ட ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள்
ரூ. 4 கோடி ஒதுக்கீடு: கிடப்பில் பாலம் கட்டும் பணி; 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் மக்கள்

திருமருகல் அருகே தெற்கு புத்தாற்றில் புதிய பாலம் கட்ட ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலைக்கு பொதுமக்கள், மாணவர்கள் தள்ளப்பட்டு தவித்து வருகின்றனர்.  
நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள துறையூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் கூட்டுறவு அங்காடி
 உள்ளது. 
இங்குள்ள அங்கன்வாடியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு சுமார் 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். மேல் படிப்புக்கு நாகை,திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில், துறையூர் கிராமம் தெற்கு புத்தாற்றில் இருந்த பாலம் சேதமடைந்ததையடுத்து, பிரதம மந்திரி மேம்பாட்டு நிதியின்கீழ் சுமார் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் மற்றும் சாலைகள் அமைக்க பணிகள் தொடங்கின. சுமார் 10 சதவீத பணிகள் நடைபெற்ற நிலையில், ஏனோ காரணத்தினால் பாலம் கட்டும் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 
இதையடுத்து, துறையூர் கிராம மக்கள் சென்றுவர பாலம் கட்டும் பணி அருகில் ஆற்றின் குறுக்கே மண் சாலை அமைக்கப்பட்டு அதன் வழியே அவ்வூர் மக்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பாலம் கட்டும் பணி நிறைவு பெறாத நிலையில், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண் சாலை அகற்றப்பட்டு அதன் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
இதனால் துறையூர் கிராம மக்கள் போக்குவரத்துக்கு அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் சென்று வர பாலம் இல்லாததால் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு கூட சரியான சாலை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மருங்கூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆற்றின் கரையில் உள்ள கருவேல மரங்களுக்கிடையில் புகுந்துவர வேண்டியுள்ளது. 
இதனால், பள்ளி மாணவர்கள் சிரமப்படுவதுடன், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். 
இதுகுறித்து, விவசாயி நவநீதம் கூறியது: பாலம் கட்டுவதற்கு, 10 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த புள்ளி விடப்பட்டது. ஆனால், பாலத்தை 3 மாதங்களுக்கு முன்பு இடித்து விட்டு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு தான் தரைத் தளத்தில் கம்பிகள் கட்டி கான்கிரீட் போட்டனர். கான்கிரீட் போட்ட அடுத்த நாளே ஆற்றில் தண்ணீர் வந்து விட்டது. இந்த பாலத்தின் தரம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. எனவே, பாலம் கட்டும் பணியை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பாலப் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என்றார். 
விவசாயி தாமோதரன் கூறியது: பாலம் கட்டுவதற்கு, துறையூர் கிராமமக்கள் ஒப்பந்ததாரருக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறோம். ஜல்லி, மணல் கொட்டுவதற்கு இடம் கொடுத்துள்ளோம். பாலத்துக்கு தேவையான மண் கொடுத்துள்ளோம். ஆனால் ஒப்பந்தக்காரர் பாலம் கட்டும் பணியில் அலட்சியம் காட்டுகிறார் என்றார். 
விவசாயி அப்பாறு கூறியது: எங்கள் கிராமத்துக்குச் சாலை வசதி இல்லை. அரசு அலுவலர்களிடம் பல முறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, இருந்த பாலமும் சேதமடைந்து புதிய பாலம் கட்ட தொடங்கினர். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு மாற்று தற்காலிக பாலம் அமைத்து கொடுப்பதுடன், புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com