டெண்டர் விட்டு ஓராண்டாகியும் கிடப்பில் சீர்காழி புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணி 

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்குவதால் புதிய வட்டாட்சியர் அலுவலகக்
டெண்டர் விட்டு ஓராண்டாகியும் கிடப்பில் சீர்காழி புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணி 

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்குவதால் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டும்பணியை விரைந்து தொடங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதே வளாகத்தில் செயல்பட்டு வந்த சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கல்விச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, தேர்தல் பிரிவின்கீழ் வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது, ஒவ்வொரு பகுதி ஊராட்சிகளிலும் இ-சேவை மையம் செயல்பட்டு வந்தாலும் மக்கள் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து சான்றிதழ்கள் சரிபார்ப்பு போன்ற நிலைகள் குறித்து கேட்டறிய வந்து செல்கின்றனர். மேலும் ஒரே பகுதியில் மற்ற அரசு அலுவலகங்களும் இயங்கி வருவதால் கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் ஒரே இடத்தில்  தங்களது தேவைகளை அருகருகே பூர்த்தி செய்து கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்த கட்டடம் பழைமையாகி சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ரூ.1.83 கோடி செலவில் புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த ஒப்பந்த பணிக்கு டெண்டர் விடப்பட்டது. புதிய கட்டடம்  கட்டுவதற்கு ஏதுவாக  சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டநாதர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண அரங்குக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு  வாடகைக்கு வட்டாட்சியர் அலுவலகம்  இயங்கி வருகிறது. 
இந்த தற்காலிக அலுவலகம் இயங்கும் வளாகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. இதனால் பெண்கள், வயோதிகர்கள் பெரும் அவதியடைகின்றனர். புதிய கட்டடம் கட்டும் இடத்தில் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டுவந்ததால் பணிகள் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தட்டிக்கழித்து வந்தனர். தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்பட்டதால் பழைய இடம் காலியாக உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்ட எந்த தடையும் இல்லை. ஆனாலும், புதிய கட்டடம் கட்ட டெண்டர் விட்டு ஓராண்டை கடந்தும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
இதுகுறித்து, பாமக மாவட்ட துணைச் செயலர் இளங்கோவன் கூறியது: சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம், கிளை சிறைச்சாலை,பொதுப்பணித் துறை அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கருவூலம், நீதிமன்றம் என அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கி வந்தன. இந்த கட்டடங்களில் பெரும்பாலானவை பழைய கட்டடங்களாக இருப்பதால் கரூவூல அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு அலுவலகத்துக்கும் புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதி பெற்றுள்ளது. இதேபோல், வட்டாட்சியர் அலுவலகத்துக்கும்  புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டை கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்குவதால் மக்கள் சிரமத்தை போக்கும் வகையில், உடனடியாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com