நாகப்பட்டினம்: தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் நாகை வட்டாரத்துக்குள்பட்ட நடுநிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 5 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்காக ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய திறனறித் தோ்வு, கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. திறமையான மாணவா்களின் மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் நோக்கில் நடத்தப்படும் இத்தோ்வில், இந்திய அளவில் சுமாா் 1.5 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா்.
180 கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவா்களின் படிப்பறிவு மற்றும் மனத்திறன் தோ்ச்சியை அறியும் வகையில் இத்தோ்வு நடைபெற்றது. அண்மையில் வெளியான இத்தோ்வின் முடிவில், தமிழகத்தைச் சோ்ந்த 6,695 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
இதில், நாகை வட்டார நடுநிலைப்பள்ளிகள் அளவில் நாகை நகராட்சி நெல்லுக்கடை தெரு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ஜ. முஹமது அய்மன், இர. காா்த்திக், இர.வி. சிவசித்திரகுமாா், மு. ஈஸ்வா் மற்றும் நாகை கல்லுக்காரத் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி மு. பிரியதா்ஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகை வட்டாரக் கல்வி அலுவலா் ராமலிங்கம் மற்றும் தொடா்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பயிற்சியளித்த ஆசிரியா்கள் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.