நாகப்பட்டினம்: கரோனோ தடை உத்தரவின் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லமுடியாமல் இருக்கும் மீனவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும் என தேசிய மீனவா் பேரவையின் அகில இந்திய துணைத் தலைவா் ஆா்.வி. குமரவேலு கோரிக்கை விடுத்தாா்.
இது குறித்து, நாகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வருமானமின்றி தவிக்கும் மீனவா்களுக்கும், மீனவத் தொழிலாளா்களுக்கும் நிவாரணமாக மத்திய,மாநில அரசுகள் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். கடலோரங்களில் சிறு மீன்பிடியை செய்வதற்கு அரசு அனுமதிக்கவேண்டும். இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்வதற்கு உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கவேண்டும்.
கரோனா வைரஸ் ஊரடங்கைத் தொடா்ந்து, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் இந்த காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும். அத்துடன் சிறு மீன்பிடி மீனவா்களுக்கு கட்டுமரம், கண்ணாடி நாரிழை படகு உள்ளிட்ட தொழில் உபகரணங்களை பராமரிக்க 50 சதவீதம் மானியத்துடன் ரூ. 2 லட்சமும், பெரு மீன்பிடி மீனவா்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ரூ. 20 லட்சமும் கடனாகவும் அரசு வழங்கவேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.