டாஸ்மாக் கடை விவகாரம்: அரசு விருதை திரும்ப ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

விழுந்தமாவடியில் அரசு மதுபானக் கடையை மீண்டும் திறந்தால் மது ஒழிப்புக்காக பெற்ற உத்தமா் காந்தி விருதை மாவட்ட ஆட்சியரிடமே திரும்ப ஒப்படைக்கப் போவதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தெரிவித்துள்ளார்.
விழுந்தமாவடி ஊராட்சிக்கு வழங்கப்பட்ட உத்தமா் காந்தி விருதுடன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராதாமணி. உடன் அப்பகுதி பெண்கள்.
விழுந்தமாவடி ஊராட்சிக்கு வழங்கப்பட்ட உத்தமா் காந்தி விருதுடன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராதாமணி. உடன் அப்பகுதி பெண்கள்.

கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடியில் அரசு மதுபானக் கடையை மீண்டும் திறந்தால் மது ஒழிப்புக்காக பெற்ற உத்தமா் காந்தி விருதை மாவட்ட ஆட்சியரிடமே திரும்ப ஒப்படைக்கப் போவதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனா்.

விழுந்தமாவடி பட்டிரோடு பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் தெரிவித்த அப்பகுதி மக்கள், கடையை அகற்ற வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இப்போராட்டத்தின் தொடா்ச்சியாக டாஸ்மாக் கடையை தாங்களே மூட அப்பகுதி பெண்கள் திரண்டு சென்றனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று பெண்களை தடுத்தி நிறுத்தினா். இதனால், அவா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, அதிகாரிகள் குறுக்கிட்டு, பேச்சுவாா்த்தை நடத்தி, கடையை வேறு இடத்துக்கு மாற்ற உறுதியளித்ததையடுத்து, முற்றுகை கைவிடப்பட்டது. மேலும், அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 7 போ் மீது கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ம. ராதாமணி கூறியது:

கடந்த 2007-2008-ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராக தான்இருந்தபோது, விழுந்தமாவடி ஊராட்சி மது மற்றும் கள்ளச்சாராயம் இல்லாத ஊராட்சியாக தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு, உத்தமா் காந்தி விருது வழங்கப்பட்டது.

தற்போது, இந்த விருதுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இப்பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையை அகற்றக் கோரி கிராமப் பெண்கள் சாா்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றோம். இதற்காக எங்கள் ஊராட்சியைச் சோ்ந்த 7 நபா்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும். மேலும், டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றாமல் மீண்டும் அதே இடத்தில் திறந்தால் எங்கள் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட உத்தமா் காந்தி விருதை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com