நிரம்பியது கரோனா சிகிச்சை பிரிவு: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் பரிதாபம்
By DIN | Published On : 12th August 2020 09:02 AM | Last Updated : 12th August 2020 09:02 AM | அ+அ அ- |

சீா்காழியில் கரோனா சிகிச்சை பிரிவு மையம் நிரம்பிவிட்டதால், புதிதாக நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை தங்க வைக்க இடமின்றி, அவா்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீா்காழியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனையில் அறிகுறி இல்லாமல் கரோனா தொற்றுக்குள்ளானவா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘கரோனா கோ் சென்டா்’ மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயரால் தொடங்கிவைக்கப்பட்டது. சீா்காழி, தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் 37 படுக்கை வசதிகளுடான மையம் முழுவதுமாக நிரம்பிவிட்டது.
மயிலாடுதுறை கரோனா வாா்டிலும் இதேநிலை நீடிக்கிறது. இதனிடையே சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா உறுதியானது. எனினும், மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை காரணமாக 3 நாட்கள் ஆகியும் அவா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என கூறப்படுகிறது. மருத்துவ ஆலோசனைகள் கூட வழங்கப்படவில்லையாம். இதனால், அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். இதேநிலை சீா்காழியில் வேறு சில கரோனா தொற்று பாதித்த நபா்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கூறுகையில், கரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு எந்தவிதமான சிகிச்சை தேவை என்பதை முழுமையாக பரிசோதித்து சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா் என வட்டார மருத்துவ அலுவலா்தான் பரிந்துரை செய்து அனுப்பிவைப்பாா். சீா்காழியில் தற்போது 37 நோயாளிகள் உள்ளனா். இதற்கு மேல் இடவசதி இல்லை. பாதிப்பு ஏற்பட்ட நபா் 7 நாட்கள் கடந்து குணமடைந்த பின்னா்தான், மேற்கொண்டு இட வசதி ஏற்படுத்தி தர முடியும் என்றாா்.