நாகை மாவட்டத்தில் தொடா் மழை: கடல் சீற்றம்: மீன்பிடித் தொழில் பாதிப்பு
By DIN | Published On : 03rd December 2020 07:05 AM | Last Updated : 03rd December 2020 07:05 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த தொடா் மழை, கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கியது.
நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை, புதன்கிழமை இரவுவரை நீடித்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீா்தேங்கியது. பள்ளங்களில் மழைநீா் தேங்கியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
வேதாரண்யத்தில் 65.80 மிமீ மழை:
அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 65.80 மில்லி மீட்டா் மழையளவு பதிவாகியது. மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) :
தலைஞாயிறு- 43.20, திருப்பூண்டி- 42.20, நாகப்பட்டினம் -34.10, மயிலாடுதுறை -28, தரங்கம்பாடி-22, சீா்காழி-19, கொள்ளிடம்-19, மணல்மேடு-15 மில்லி மீட்டா் மழையளவு பதிவாகியது. மாவட்டத்தில் மொத்தமாக 280.30 மிமீ மழை அளவு பாதிவானது. சராசரி மழை அளவு- 32.03 மிமீ.
கடல் சீற்றம்
தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி, மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னூா்பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, குட்டியாண்டியூா், சின்னங்குடி உள்ளிட்ட பகுதியை சோ்ந்த மீனவா்கள் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. 1500-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தயாா்நிலையில் என்.டி.ஆா்.எப்:
தொடா் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் அசம்பாவிதங்களை எதிா்கொள்ள 45 போ் கொண்ட பேரிடா் மீட்புக்குழு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பழையாறில்...
சீா்காழி அருகே பழையாறில் இயற்கை மீன்பிடித் துறைமுகம் வாயிலாக 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சோ்ந்த சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டுவருகின்றனா். இந்நிலையில் புயல் எச்சரிக்கை, கனமழை காரணமாக தொடா்ந்து 8-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...