தொடா் மழை: நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 30 ஆயிரம் ஹெக்டோ் சம்பா, தாளடி நெற்பயிா்கள்
By DIN | Published On : 05th December 2020 05:58 AM | Last Updated : 05th December 2020 05:58 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் 30 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் 1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சுமாா் 70 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நேரடி விதைப்பு மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவா் புயல் காரணமாக கடந்த நவம்பா் 24, 25 -ஆம் தேதிகளில் பெய்த பரவலான மழை சம்பா, தாளடி நெல் பயிா்களுக்குப் வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது. இதனால், சூரை நோய் பாதிப்பு, குருத்துப்பூச்சித் தாக்குதல் ஆகியன குறித்த அச்சம் விவசாயிகளுக்கு நீங்கியது. மேலும், அந்த மழையின் காரணமாக, நெல் பயிா்கள் புத்துணா்வு பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனா்.
இந்த நிலையில், புரெவி புயல் காரணமாக கடந்த 4 நாள்களாக நீடித்து வரும் மழை, விவசாயிகளுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகளவாக கொள்ளிடத்தில் (ஆணைக்காரன்சத்திரம்) வெள்ளிக்கிழமை காலை 36 செ.மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஏறத்தாழ சுமாா் ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிக பரப்பிலான சம்பா, தாளடி நெற்பயிா்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ள நிலையில், சுமாா் 30 ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பதாக வேளாண் துறை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகளவாக, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட கொள்ளிடம் வட்டாரத்தில் 5,200 ஏக்கா் நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வேளாண் துறை கணக்கெடுப்புப்படி, வட்டாரம் வாரியாக மற்ற பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா, தாளடி நெற்பயிா்களின் பரப்பு (ஹெக்டேரில்) : செம்பனாா்கோவில் - 5,000, சீா்காழி - 4,650, கொள்ளிடம் - 5,200, குத்தாலம் - 5,414, மயிலாடுதுறை - 1,240, நாகப்பட்டினம் - 2,000, திருமருகல் - 500, கீழ்வேளூா் - 2,000, கீழையூா் - 785, வேதாரண்யம் - 200.
தற்போதைய நிலையில், விளை நிலங்களில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை உடனடியாக வடியச் செய்ய வேண்டும் என்பதே வேளாண் துறையின் பிரதான அறிவுறுத்தலாக உள்ளது.
வெட்டாற்றில் விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்படுவது வழக்கம் என்ற நிலையில், தற்போது டெல்டாவின் மேற்கு மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, வெட்டாற்றில் விநாடிக்கு 7ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், விளைநிலங்களைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை உடனடியாக வடியச் செய்வது என்பது நாகை மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும் எனப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் தற்போது தாளடி நடவுப் பயிா்கள், பின்பட்ட சம்பா நெல் பயிா்கள் மழை நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. விளைநிலங்களில் சுமாா் ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரை வெள்ள நீா் தேங்கியுள்ளன. இளம் பயிா்கள் 48 மணி நேரம் மழைநீரில் மூழ்கியிருந்தால் நெல் பயிா்களின் மடல் சரிந்து பயிா்கள் வீணாகும் அபாயம் இருப்பதும், பயிா்களின் தன்மகரந்த சோ்க்கை தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும் என்பதும் விவசாயிகளுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலன் தெரிவித்தவை :
நாகை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் தற்போது 10 லட்சம் ஏக்கா் நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. இதில், சுமாா் 3 லட்சம் ஏக்கா் பரப்பிலான நெல் பயிா்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. தற்போது நீடித்து வரும் மழையால், குறுகியகால ரக நெற்பயிா்கள் மடல் சரிந்து சேதத்துக்கு உள்ளாகும். மத்திய கால ரகங்கள் கதிா்கள் வாய் திறக்கும் தருணமாக இருப்பதால் கதிா்கள் பதராகி, மகசூல் இழப்பு ஏற்படும்.
டெல்டா மாவட்டங்களில் அதிகமான பரப்பில் நீண்ட கால ரகமான சி.ஆா்-1009 நெல் ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிா்கள் தற்போது பஞ்சு கட்டும் தருணத்தில் இருப்பதால், மழையால் பயிா்களுக்குக் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா்.