சட்டநாதபுரத்தில் குடியிருப்பில் புகுந்த உப்பனாற்று தண்ணீா்
By DIN | Published On : 05th December 2020 05:51 AM | Last Updated : 05th December 2020 05:51 AM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உப்பனாற்று தண்ணீா் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதுகாப்பான இடங்களில் வெள்ளிக்கிழமை தங்கவைக்கப்பட்டனா். தண்ணீா் சூழ்ந்த பகுதியை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை சிறப்பு அலுவலா் லலிதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.
சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, சீா்காழியில் 21 செமீ மழைநீா் பதிவாகியது. இந்த கனமழையால் சட்டநாதபுரம் ஊராட்சி சூரக்காடு கீழத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை உப்பனாறு தண்ணீா் சூழ்ந்தது.
சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவா் தஷ்ணாமூா்த்தி, சீா்காழி ஒன்றிய ஆணையா் கஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதி மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, அருகில் உள்ள பள்ளி, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் லலிதா ஆகியோா் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.
பின்னா் ஆட்சியா் பிரவீன் பி.நாயா் செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையம், தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக் கட்டடங்களில் மையங்களில் 15 ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டடுள்ளனா். இவா்களுக்கு இரவு உணவுகள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரப்படி 158 வீடுகள் பகுதி மற்றும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 28 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குருத்து வராத பயிா்கள், முத்திய,பிஞ்சுபயிா்கள் என பாதிக்கப்பட்ட பயிா்கள் பாதிப்பு குறித்து வேளாண்மைத்துறை மூலம் ஆய்வு செய்து 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால், பேரிடா் நிவாரணத்திலிருந்து சரிசெய்யப்படும். பயிா்க் காப்பீடு மூலமும் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...