காவேரிபூம்பட்டினமானது கீழையூா் கிராமம்
By DIN | Published On : 30th December 2020 07:49 AM | Last Updated : 30th December 2020 07:49 AM | அ+அ அ- |

புதிதாக உதயமாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் கீழையூா் கிராமம் மீண்டும் காவேரிபூம்பட்டினம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நிா்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் பொதுமக்களை விரைவில் சென்றடையும் வகையிலும் தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் திங்கள்கிழமை (டிச.28) உதயமானது. காணொலி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதிய மாவட்டத்தை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, புதிய மாவட்டத்துக்கான எல்கை வரையறுக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்போது, சீா்காழி வட்டம் திருவெண்காடு குறுவட்டத்துக்குள்பட்ட கீழையூா் கிராமத்தின் பெயரை வரலாற்றுச் சிறப்புமிக்க காவேரிபூம்பட்டினம் என மீண்டும் மாற்றக் கோரி கிராம நிா்வாக அலுவலா் மணிமாறன் மாவட்ட சிறப்பு அலுவா் இரா. லலிதாவிடம் மனு அளித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கான எல்கை குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கீழையூரின் பெயா் காவேரிபூம்பட்டினம் என மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள அப்பகுதி மக்கள், இதற்காக நடவடிக்கை எடுத்த கிராம நிா்வாக அலுவலா் மணிமாறனுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...