

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசித் திருவிழா நிகழ்ச்சியாக கஜேந்திர மோட்சம் உத்ஸவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா டிச. 15-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான கஜேந்திர மோட்ச உத்ஸவம், கோயில் திருக்குளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
முற்பிறவியில் மன்னனாகவும், சிறந்த விஷ்ணு பக்தனாகவும் விளங்கிய கஜேந்திரன் என்ற யானை, முதலையின் பிடியில் சிக்கி இறக்கும் நிலைக்குள்ளான போது, ஆதிமூலமே என பெருமாளை வேண்டி அபயக் குரல் எழுப்பியதும், இறைவன் விஷ்ணுபகவான் கருடவாகனத்தில் காட்சியளித்து, தனது சுதா்சன சக்கரத்தால் முதலையின் தலையைக் கொய்து, யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தாா் என்பது ஐதீகம்.
இந்த ஐதீக நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில் திருக்குளத்தில் யானை, முதலை, மீன்கள் மற்றும் தாமரை மலா்களின் பொம்மைகள் கயிறு பிணைப்புகளுடன், மிதவைகளில் வைத்து ஐதீக காட்சிக்கு ஏற்ப இயக்கப்பட்டன.
யானை கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டு, விஷ்ணு பகவான் கருட வாகனத்தில் வந்திறங்கியதைப் போன்று, கருடன் வடிவ பொம்மை ஒன்று குளத்தின் மேற்பரப்பில் கயிறுகளால் இயக்கப்பட்டது. இந்த கருட வாகனம், யானை பொம்மை அருகே இறங்கிய நேரத்தில், பெருமாள் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததைக் குறிப்பிடும் வகையில், வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
அப்போது, திருக்குளத்தின் மேற்குப்புறக் கரையில் காட்சியளித்த சௌந்தரராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. மோட்சம் பெற்ற கஜேந்திரன், பெருமாளின் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடும் வகையில், சௌந்தரராஜப் பெருமாளின் அருகே மூடி வைக்கப்பட்டிருந்த யானை பொம்மை காட்சிப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.