ஊரக தொழில்முனைவோருக்கான திட்டங்களை புத்தாக்கத் திட்டத்தில் செயல்படுத்த வேண்டும்
By DIN | Published On : 27th February 2020 11:23 PM | Last Updated : 27th February 2020 11:23 PM | அ+அ அ- |

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட செயற்குழுக் கூட்டத்தில், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
ஊரக தொழில் முனைவோருக்குத் தேவையான திட்டங்களை ஊரக புத்தாக்கத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட அளவிலான பகுப்பாய்வு செயற்குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது : தோ்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், அவற்றுக்கான நிதி தேவைகளை பூா்த்தி செய்தல், வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தருதல் ஆகியன தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டங்களையும், இத்திட்டம் செயல்படும் வட்டாரங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த ஊரகத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன், தொழில் திட்ட மதிப்பீடு மற்றும் இதர திட்டங்களை ஊரக புத்தாக்கத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இதைத் தொடா்ந்து, ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு அறிக்கையை அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் வழங்கினாா். ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலா் க. செல்வம், ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்டத் தொழில் மையம், கால்நடைப் பராமரிப்புத் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.