வேளாங்கண்ணி அருகே பாலம் உடைந்து விபத்து
By DIN | Published On : 27th February 2020 08:19 AM | Last Updated : 27th February 2020 08:19 AM | அ+அ அ- |

சின்னத்தும்பூா் அருகே மரவனாற்றுப் பாலத்தில் விபத்துக்குள்ளான லாரி.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றுப்பாலம் உடைந்து, மணல் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள சின்னத்தும்பூா் பகுதியில் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக, ஈரோட்டிலிருந்து மணல் (எம்-சாண்ட்) ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சின்னத்தும்பூா் நோக்கி புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி, சின்னத்தும்பூா் அருகே உள்ள மரவனாற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பாலம் திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில், லாரியின் இரு பின் சக்கரங்களும் ஆற்றில் சிக்கின. சுமையுடன் உள்ள அந்த லாரியை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மரவனாற்றுப் பாலம் வழியேயான போக்குவரத்துத் தடைப்பட்டது.
தற்காலிக ஏற்பாடாக மின்கம்பங்களை ஆற்றின் குறுக்கே கிடத்தி, பள்ளி மாணவ, மாணவிகள் அதன் வழியே பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலப்பிடாகை - கருங்கண்ணி, சோழவித்யாபுரம், சின்னத்தும்பூம்பூா், கிராமத்துமேடு, நிா்த்தனமங்கலம் வழியே நாகை செல்லும் முக்கியச் சாலையாக இந்தச் சாலை இருப்பதால், பாலத்தை புனரமைக்கவும், தற்காலிக பாலம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அப்பகுதி மக்கள்.