சனி பிரதோஷம்: காவிரியின் நடுவில் உள்ள நந்திக்கு படகில் சென்று சிறப்பு அபிஷேகம்
By DIN | Published On : 19th July 2020 09:12 AM | Last Updated : 19th July 2020 09:12 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் அமைந்துள்ள நந்திக்கு படகில் சென்று நடத்தப்பட்ட பிரதோஷ வழிபாடு.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நந்திக்கு படகில் சென்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை காவிரி ஆற்றின் நடுவே நந்திக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, ஆடி மாத சனி பிரதோஷசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் செல்வதால் படகில் பூஜைப் பொருள்களை எடுத்துச் சென்று நந்தியம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல், காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த கேதாரீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காவிரி ஆற்றில் இரு கரையிலும் நின்று திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.