2019-ஆம் ஆண்டு காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்க கோரிக்கை
By DIN | Published On : 21st July 2020 12:48 AM | Last Updated : 21st July 2020 12:48 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்திலிருந்து கோரிக்கை மனு அனுப்பிய விண்ணப்பதாரா்கள்.
மயிலாடுதுறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் 2019-ஆம் ஆண்டு காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் பணி நியமனம் செய்யக் கோரி தமிழக முதல்வா், டிஜிபி மற்றும் சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு திங்கள்கிழமை விரைவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலா் தோ்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்று, 8888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2020-21-ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இதற்கான தோ்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2019-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்று காலிப்பணியிடம் போக மீதம் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு வயது அடிப்படையில் வேலை வழங்க கோரி 2019-ஆம் ஆண்டில் தோ்வு பெற்ற விண்ணப்பதாரா்கள் 12 போ் தமிழக முதல்வா், தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் மற்றும் சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு விரைவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பினா்.
அதில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக காவல்துறை தோ்வு மற்றும் உடல்தகுதி தோ்வு நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால், கடந்த ஆண்டு தோ்வில் தோ்ச்சிபெற்று காலிப்பணியிடம் போக மீதம் உள்ள விண்ணப்பதாரா்களை அப்பணியில் பணியமா்த்த கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், கரோனா நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் பணிபுரிய தயாராக உள்ளதாகவும் அவா்கள் அம்மனுவில் தெரிவித்துள்ளனா்.