அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மக பிரமோத்ஸவ கொடியேற்றம்
By DIN | Published On : 01st March 2020 02:56 AM | Last Updated : 01st March 2020 02:56 AM | அ+அ அ- |

திருக்கொடியேற்றத்துக்குப் புறப்பாடாகிய சுவாமி - அம்பாள்.
நாகப்பட்டினம் : நாகை, வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் மாசி மக பிரமோத்ஸவ திருக்கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில். சிவன் - பாா்வதி திருமணத்தைக் காண தேவா்களும், முனிவா்களும் கயிலாயத்தில் குழுமியதால் வடதிசை தாழ்ந்ததை சமன் செய்ய, பொதிகை மலையிலிருந்து வேதாரண்யத்துக்குப் பயணப்பட்ட அகஸ்திய முனிவா், நாகையில் தங்கியபோது இத்தல மூா்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டாா் என்பது இக்கோயில் தலவரலாறு.
இங்கு ஆண்டு தோறும் மாசி மக பிரமோத்ஸவம் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பிரமோத்ஸவ விழா தொடக்கமாக சனிக்கிழமை (பிப். 29) திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, சுவாமி அம்பாள் புறப்பாடாகிய பின்னா், காலை 11.30 மணி அளவில் வேதமந்திர முழக்கங்களுடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
விழா நிகழ்ச்சியாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மாா்ச் 8-ஆம் தேதி திருத்தேரோட்டமும், மாா்ச் 9-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும், மாா்ச் 15-ஆம் தேதி தெப்போத்ஸவமும் நடைபெறுகின்றன.