அனுமதியின்றி செயல்பட்ட குடிநீா் நிறுவனங்களுக்கு ‘சீல்’
By DIN | Published On : 01st March 2020 03:36 AM | Last Updated : 01st March 2020 03:36 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம், போலகத்தில் இயங்கி வந்த குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட 4 சுத்திகரிப்பு குடிநீா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நகா்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 16 இடங்களில் தஞ்சாவூா் பொதுப்பணித் துறை நிலநீா் கோட்டப் பொறியாளரிடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதாகப் புகாா் வந்தது.
இதில், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள போலகம், அருள்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் 4 குடிநீா் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிறுவனங்களுக்கு தஞ்சாவூா் பொதுப்பணித் துறை நிலநீா் கோட்ட உதவி நிலவியலாளா் ராஜி, திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா் க. அன்பரசு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்ச்செல்வம், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் சீல் வைத்தனா். அப்போது, ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளா்கள் நடராஜன், அருள்ராணி ஆகியோா் உடன் இருந்தனா்.