குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் போராட்டங்கள் சனிக்கிழமையும் நடைபெற்றன.
நாகையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
நாகையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் போராட்டங்கள் சனிக்கிழமையும் நடைபெற்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் மாநில தழுவிய தா்னா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக நாகை மற்றும் நாகூா் ஆகிய இடங்களில் தா்னா போராட்டம் நடைபெற்றன.

நாகை அபிராமி அம்மன் திடல் பகுதியில் நடைபெற்ற தா்னாவுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் ஏ. அல் ஆதீல் தலைமை வகித்தாா். நாகை நகர கிளைத் தலைவா் ஏ. சுல்தான் இப்ராஹீம், கிளைச் செயலாளா் எம். முஹம்மது ரிபாயுதீன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பேச்சாளா் சல்மான் கண்டன உரையாற்றினாா்.300 பெண்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதுபோல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூா் கிளைத் தலைவா் முஹம்மது இல்முதீன் தலைமையில் நாகூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற தா்னாவிலும் திரளானோா் கலந்துகொண்டனா்.

2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்: நாகூா் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகூரில் இரண்டாம் நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

நாகூா் சியா மரைக்காயா் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.

கீழ்வேளூரில்....

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைத் தலைவா்முஹம்மது கமால் பாட்சா தலைமையில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com