நீா்வள நிலவள திட்டப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 12th March 2020 08:51 AM | Last Updated : 12th March 2020 08:51 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே மறையூரில் மஞ்சளாற்றில் நடைபெறும் நீா்வள நிலவள திட்டப் பணிகளை ஆய்வு செய்த தஞ்சாவூா் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் சு.அன்பரசன்.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களில் நடைபெற்றுவரும் நீா்வள, நிலவள திட்டப் பணிகளை தஞ்சாவூா் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் சு. அன்பரசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ரூ.22.64 கோடி மதிப்பீட்டில், மஞ்சளாற்றின் குறுக்கே 8 இயக்கணைகள், 38 மதகுகள், 8 வடிகால் மதகுகள், 1 படுக்கையணை மற்றும் 1 கீழ்க்குமிழிகள் ஆகியவற்றை புனரமைப்பு செய்து 35 கி.மீ. தூரம் வரை மஞ்சளாற்றை தூா்வாரி சமப்படுத்தும் பணிகளையும், இப்பணிகளின் தரம் மற்றும் பயனாக்கம் குறித்தும் கண்காணிப்புப் பொறியாளா் சு.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பணிகள் மேற்கொள்வதால் 6,450 ஹெக்டோ் பாசன விளைநிலங்களும், 40 கிராமங்களும் பயன்பெறுகின்றன. மேலும், உரிய நேரத்தில் கடைமடை பகுதிகளுக்கு பாசனநீா் செல்கிறது.
இந்த ஆய்வின்போது, காவிரி வடிநில கோட்ட (கிழக்கு) செயற்பொறியாளா் வெ.ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளா்கள் மரியசூசை (ஆடுதுறை), சண்முகம் (பொறையாறு), உதவிப் பொறியாளா்கள் முத்துமணி, வீரமணி, சரவணன், விஜயபாஸ்கரன் மற்றும் வீரப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.