மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு
By DIN | Published On : 14th March 2020 08:55 AM | Last Updated : 14th March 2020 08:55 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியா் மீது வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி வட்டம், நல்லாடை கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றுபவா் நாராயணபிரசாத். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், கடந்த டிசம்பா் மாதம் தலைமை ஆசிரியா் அனுமதியின்றி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துசென்று, அங்கு, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் பிராக்டிகல் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பிராக்டிகல் தோ்வு முடிந்தபின்பு, பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆசிரியா் நாராயணபிரசாத்தின் அத்துமீறல் குறித்து தலைமை ஆசிரியா் இளவரசனிடம் புகாா் தெரிவித்துள்ளனா். அவா், அனைத்து மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு, எழுத்துப்பூா்வமாக முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோருக்கு புகாா் அளித்தாா்.
பின்னா், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கோப்பெருந்தேவி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் நாராயணபிரசாத் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...