நாகை மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை
By DIN | Published On : 31st March 2020 02:55 AM | Last Updated : 31st March 2020 02:55 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசியது:
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகளிலேயே தனித்திருப்பது மட்டுமே இதற்கு மருந்தாக உள்ளது. வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
நாகை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 10 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோா் 1200 பேருக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.வெளியூா்களிலிருந்து சுற்றுலா வந்த 44 போ் வேளாங்கண்ணியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சா் ஓ. எஸ்.மணியன் பாா்வையிட்டாா்.
ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வேதாரண்யம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளாா். இதற்கான பரிந்துரை கடிதத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...