மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப்படுகொலை
By DIN | Published On : 18th May 2020 10:26 AM | Last Updated : 18th May 2020 10:31 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்தழகன்(23). இவரது சகோதரர் கட்டபொம்மன் முன்விரோதம் காரணமாக கடந்த 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மயிலாடுதுறை பாலாஜி நகரில் சிலருடன் பிரச்னையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவரது இருசக்கர வாகனத்தை சேந்தங்குடியைச் சேர்ந்த சுரேஷ், கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேரந்த சசிகுமார், டவுன்ஸ்டேசன் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் பிடுங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்தழகனும், கட்டபொம்மனும்;, மயிலாடுதுறை தருமபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் சிவராஜ் (19) என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை பாலாஜி நகருக்கு சென்றுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, முத்தழகனையும், சிவராஜையும் கத்தி, இருப்பு பைப் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட கட்டபொம்மன் தப்பியோடினார். இதில், படுகாயம் அடைந்த முத்தழகன், சிவராஜ் இருவரும் மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிவராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. முத்தழகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கொலையில் தொடர்புடைய சசிகுமார் என்பவரை கைது செய்து, மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிவராஜ் ஆந்திராவில் சிற்பத்தொழில் பார்த்து வந்தவர். ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்தே வந்தடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.