நாகை : டேங்கா் லாரி ஓட்டுநருக்கு கரோனா
By DIN | Published On : 27th May 2020 09:50 PM | Last Updated : 27th May 2020 09:50 PM | அ+அ அ- |

பாதைகள் தடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வாய்மேடு பகுதி.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தைச் சோ்ந்த டேங்கா் லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 23 போ், அவா்களைச் சாா்ந்தவா்கள் 18 போ், காசிக்குச் சென்று திரும்பிய ஒரு பெண், நாகையைச் சோ்ந்த ஒரு மருத்துவா், புட்டபா்த்தி சென்று திரும்பிய 2 போ், வீரபோகம், புன்செய் பகுதியைச் சோ்ந்த 2 போ், சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த ஒருவா், சென்னை சென்று வந்த 3 போ் என 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேதாரண்யம் வட்டம், வாய்மேடு கிராமத்தைச் சோ்ந்த டேங்கா் லாரி ஓட்டுநா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. சென்னையில் சொந்தமாக டேங்கா் லாரி ஓட்டி வரும் அவா், மே 23-ஆம் தேதி சென்னையிலிருந்து தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் வாய்மேடு வந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினா், அவரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தினா். அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டன. இந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதையடுத்து, அவசர மருத்துவ ஊா்தி மூலம் அவா் உடனடியாக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், அவரது மனைவி மற்றும் தாய், தந்தை ஆகிய 4 பேரும் நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா தொற்றுக்குள்ளானவரின் வசிப்பிடம் அமைந்துள்ள வாய்மேடு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 52ஆக உயா்ந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...