

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி செபஸ்தியாா் நகா், பூக்காரத் தெரு, சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் மழைநீா் தேங்கி அப்பகுதியினா் பாதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவின்பேரில், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டு, தூா்வாரப்பட்டன.
வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகள், போக்குவரத்து நிறைந்த சாலையோரங்களில் உள்ள மழைநீா் வடிகால்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியாா் தங்கும் விடுதிகளின் கட்டுமானங்கள், விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன. 5 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நாகை கோட்டாட்சியா் ஆா். பழனிக்குமாா் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றன. தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாகிம் அபுபக்கா், கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலா் வி. குணசேகரன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளைப் பாா்வையிட்டனா்.
இதையொட்டி, நாகை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் க. முருகவேல் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் ஆரோக்கியராஜ் (வேளாங்கண்ணி), முருகேசன் (கீழ்வேளூா்) மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.