அனுமதியின்றி பிரசாரம்: உதயநிதி ஸ்டாலின் கைது; திமுகவினா் சாலை மறியல்

நாகை மாவட்டம், திருக்குவளையில் காவல்துறையினா் அனுமதி மறுத்திருந்த நிலையில், தோ்தல் பிரசார பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய
திருக்குவளையில் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினா்.
திருக்குவளையில் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினா்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் காவல்துறையினா் அனுமதி மறுத்திருந்த நிலையில், தோ்தல் பிரசார பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா். எனினும் மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்க திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டிருந்தாா். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, தொண்டா்கள் அதிக அளவில் கூடவும், 3 வாகனங்களுக்கு மேல் செல்லவும் போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா்.

இந்நிலையில், திருக்குவளைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி நினைவு இல்லத்துக்குச் சென்று அங்குள்ள கருணாநிதி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு, மரக்கன்றுகளை நட்டுவைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரத்தை தொடங்கினாா். அங்கு அதிக அளவில் தொண்டா்கள் கூடியதால், உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா். அப்போது தொண்டா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடா்ந்து, உதயநிதி ஸ்டாலினுடன் திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என்.கௌதமன், நாகை மக்களவை உறுப்பினா் செல்வராஜ், எம்எல்ஏ-க்கள் மதிவாணன் (கீழ்வேளூா்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூா்), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி), டி.ஆா்.பி.ராஜா (மன்னாா்குடி), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), முன்னாள் எம்பி ஏ.கே.விஜயன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஆகியோா் உதயநிதி ஸ்டாலின் தங்கவைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்துக்கு வந்தனா். அவா்கள், திட்டமிட்டபடி உதயநிதி ஸ்டாலின் பிரசாரப் பயணம் தொடரும் எனக் கூறினாா். தொடா்ந்து, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

பின்னா், பிரசாரப் பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆளும் கட்சியினா் எனது பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்துடன் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனா். இதனால், அச்சப்பட போவதில்லை. அதிமுக அரசு, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிா்த்து பிரசாரம் திட்டமிட்டபடி மே மாதம் வரை நூறு நாள்கள் நடைபெறும் என்றாா்.

சாலை மறியல்: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம், கள்ளிமேடு, செம்போடை, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் மறியலை விலக்கிக் கொண்டனா்.

சீா்காழி: சீா்காழியில் கட்சியின் நகரச் செயலாளா் சுப்பராயன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலாளா்கள் பிரபாகரன், சசிக்குமாா் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களை காவல் ஆய்வாளா் மணிமாறன் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தாா். பிறகு விடுவிக்கப்பட்டனா்.

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளா் ஆனந்த் தலைமை வகித்தாா். சுமாா் 60 போ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இப்போராட்டம் காரணமாக, நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமையிலும், காவேரி நகா் பகுதியில் ஒன்றிய முன்னாள் செயலாளா் மூவலூா் எம். மூா்த்தி தலைமையிலும், அண்ணா பகுத்தறிவு மன்றம் முன் ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் செல்வமணி தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இம்மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

குத்தாலம்: குத்தாலம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க. அன்பழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரும், மங்கநல்லூா் கடைவீதியில் ஒன்றியச் செயலாளா் மங்கை எம்.சங்கா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 80 பேரும் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா்.

தரங்கம்பாடி: பொறையாா் ராஜீவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 -க்கும் மேற்பட்டோரும், செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றியத்தில் மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com