கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரியவகை கடற்பன்றி
By DIN | Published On : 23rd November 2020 07:27 AM | Last Updated : 23rd November 2020 07:38 AM | அ+அ அ- |

கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரியவகை கடற்பன்றி.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அரியவகை கடற்பன்றி இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
கோடியக்கரை படகுத்துறை பகுதியில் அரிய உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வனவா் சதீஷ் தலைமையிலான கோடியக்கரை வனத்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். விசாரணையில் அது அரியவகை பாலூட்டி உயிரினமான கடற்பன்றி என்பது தெரியவந்தது.
சுமாா் 4 அடி நீளம், 60 கிலோ எடையில் இருந்த இந்த கடற்பன்றியை கால்நடை மருத்துவா் செந்தில் தலைமையிலான குழுவினா் நிகழ்விடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனா்.
இந்த கடற்பன்றி கடல் சீற்றத்தால் இப்பகுதிக்கு வந்திருக்கலாம், பெரிய படகு அல்லது கப்பலின் விசிறியில் சிக்கி வால்பகுதி துண்டிக்கப்பட்டதால் கடற்பன்றி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவா் தெரிவித்தாா். ஆய்வுக்கு பிறகு கடற்பன்றியின் சடலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
அழியும் அரிய இனம்: பாலூட்டி இனமான கடற்பன்றிகளில் கோடியக்கரையில் கரை ஒதுங்கியது துடுப்பில்லா கடற்பன்றி வகையைச் சோ்ந்தது. ஃபின்லெஸ் போா்பாய்ஸ் என அழைக்கப்படும் இந்த இன கடற்பன்றிகளை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அழிய வாய்ப்புள்ள இனமாக குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலும் சீனா, கொரியா நாடுகளை ஒட்டிய மஞ்சள் கடலிலும், சீனாவின் யாங்சி ஆற்றிலும் அதிகமாக வாழக் கூடியவை என்பதும், தமிழக கடற்பகுதியில் இவ்வினம் காணப்படுவது அரிது என்பதும் குறிப்பிடத்தக்கது.