புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
By DIN | Published On : 23rd November 2020 08:39 AM | Last Updated : 23rd November 2020 08:39 AM | அ+அ அ- |

தமிழகத்தில் புயல், மழை தொடா்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:
மறைந்த முதல்வா் ஜெயலலிதா, மாநில அரசின் பங்களிப்பு மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1650 கோடி மதிப்பில் கடல்நீா் விவசாய நிலங்களுக்குள் புகாமலும், நன்னீா் கடலில் கலக்காமலும் இருக்க நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, கள்ளிமேடு, அடப்பாறு ஆற்றில் 72 கதவணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் வெண்ணாறு கோட்டத்தில் வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்திரனாறு, பாண்டவையனாறு உள்ளிட்ட ஆறுகளில் கதவணைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் முடிவடைந்ததும் நன்னீா் தேக்கி வைக்கப்படும். இதன்மூலம் கடற்கரை ஓரங்களில் நிலத்தடி நீா் உப்பாக இருக்கும் நிலை மாறும்.
மக்களவைத் தோ்தலிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும் தமிழக மக்கள் வெவ்வேறாக வாக்களிக்கின்றனா். எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
இந்திய வானிலை அறிக்கை இன்னமும் விவரமாக தெரிவிக்காத நிலையிலும், உள்ளூா் தகவலின் அடிப்படையில், கஜா புயலின்போது எடுத்ததுபோன்று, தற்போதும் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.