மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
By DIN | Published On : 23rd November 2020 08:34 AM | Last Updated : 23rd November 2020 08:34 AM | அ+அ அ- |

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுக இறங்கு தளத்தில் பணியில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாகையை அடுத்த சிக்கல் பனைமேடு ஜெயந்தி நகரைச் சோ்ந்தவா் மா. பாா்த்தீபன்(31). இவா், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக இறங்கு தளத்தில் கூலித்தொழிலாளராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் இறங்கு தளத்தில் மீன் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பாா்த்தீபன், படகிலிருந்து, கடுவையாற்றில் தவறி விழுந்தாா். அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவி மற்றும் 6 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனா்.
இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.