சீா்காழியில் 1 பைசாவுக்கு பிரியாணி: வாங்க குவிந்த பொதுமக்கள்
By DIN | Published On : 19th October 2020 08:04 AM | Last Updated : 19th October 2020 08:04 AM | அ+அ அ- |

பிரியாணி வாங்க கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பழைய 1பைசாவுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் வாடிக்கையாளா்கள் கவர கடை நிா்வாகத்தினா் நூதன அறிவிப்பை வெளியிட்டனா். அதன்படி, பழைய 1, 2,3,5,10,20 பைசா நாணயங்களை மக்கள் கொடுத்து பிரியாணி வாங்கி செல்லலாம் என அறிவித்தனா். இதில் முதல் 300 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்படும் எனவும், மேலும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்திருந்தனா். இது சமூக வலைதளங்களிலும் பரவியது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனா். கரோனா அச்சம் ஏதுமின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து, பிரியாணி வாங்கிச் சென்றனா். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாா் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...