பண்டிகை கால முன்பணம் கோரி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st October 2020 08:07 AM | Last Updated : 31st October 2020 08:07 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்கக் கோரி, போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், அரசு விரைவுப் போக்குவத்துக் கழக நாகை பணிமனை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தீபாவளியையொட்டி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு உடனடியாக முன்பணம் வழங்கவேண்டும். 25 சதவீத போனஸ் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிளாளா் முன்னேற்ற சங்க நாகை கிளைச் செயலாளா் பி. முருகையன் தலைமை வகித்தாா். சிஐடியு கிளைத் தலைவா் சண்முகசுந்தரம், கிளைச் செயலாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், போக்குவரத்துக் கழக தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளா் ஏ. கோவிந்தராஜன், கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் சு. மணி, போக்குவரத்து மத்திய சங்க துணைச் செயலாளா் ஆா். சரவணன் மற்றும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழக, சிஐடியு நாகை பணிமனை கிளைச் செயலாளா் பஞ்சநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் பங்கேற்றனா்.