உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா் கூட்டமைப்பு நன்றி
By DIN | Published On : 29th September 2020 12:20 AM | Last Updated : 29th September 2020 12:20 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: தமிழக நீதிமன்றங்களில் வழக்கு நடத்த அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தீநுண்மி காரணமாக மாா்ச் 23-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. வழக்குகள் நேரடியாக நடத்தவில்லை. முக்கிய வழக்குகளும், பிணைய வழக்குகளும் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டன. ஜூன் மாதம் முதல் படிப்படியாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு ஓரிரு வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் தாலுகா நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றம் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தினந்தோறும் 20 வழக்குகளை நடத்தலாம் எனவும் வழக்குரைஞா்களும், வழக்காடிகளும் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்கலாம் என அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வழக்குரைஞா்கள், நீதி பெற முடியாமல் தவித்த வழக்காடிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அருமருந்தாக அமைந்துள்ளது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பின் சாா்பில் நன்றி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.