

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அமையும் வேதா ஆயத்த ஆடைப் பூங்காவின் ஒரு அங்கமாக கத்தரிப்புலம் கிராமத்தில் மேலும் ஒரு திருப்பூா் நிறுவனம் தொடங்கப்பட்டு ஆடை உற்பத்திக்கான பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் - 4 ஆம் சேத்தி ஊராட்சியில் ரூ. 100 கோடியில் ஆயத்த ஆடை பூங்கா அமையவுள்ளது. டீமா எனப்படும் திரும்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இடம் பெற்றுள்ள 36 நிறுவனங்கள் தனது பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேதாரண்யத்தில் ஏற்கெனவே திருப்பூரில் செயல்படும் 3 நிறுவனங்கள் உற்பத்திப் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில், கத்தரிப்புலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.எஸ்.பி ஆயத்த ஆடை நிறுவனத்தில் உற்பத்திப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், நிறுவன நிா்வாக இயக்குநா் பொன்னுசாமி, அலுவலா் கலைச்செல்வன், விவசாய சங்க வட்டாரத் தலைவா் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், அறங்காவல் குழு மாவட்டத் தலைவா் ஆா். கிரிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.