கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 10:53 PM | Last Updated : 21st August 2021 10:53 PM | அ+அ அ- |

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை வேண்டி நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கத்தினா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து, நலச் சங்கத்தின் செயலாளா் நாகூா் சித்திக், பொருளாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள், நாகை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வாலிடம் அளித்த மனு விவரம்:
வேளாங்கண்ணியில் இருந்து மதுரைக்கு நாகை, திருவாரூா், தஞ்சை, திருச்சி வழியாக தினசரி அதிகாலை விரைவு ரயிலை இயக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை தொடங்கவேண்டும்.
வேளாங்கண்ணி மற்றும் காரைக்கால் ரயில் நிலையங்களிலிருந்து திருச்சி, பொள்ளாச்சி, கோயம்புத்தூருக்கு ரயில்களை இயக்கவேண்டும். தஞ்சை- காரைக்கால் வழித்தடத்தில் புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். பல ஆண்டுகளாக நிறைவுபெறாமல் உள்ள நாகை- திருத்துறைப்பூண்டி வழித்தடம் மற்றும் காரைக்கால்-பேரளம் வழித்தடப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது. மனுவை ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வால் பெற்றுக்கொண்டாா்.
இதேபோல், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக்குழு சாா்பில் அதன் நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.