நாகை அக்கரைபேட்டை காமராஜா் நகா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தொட்டிகளுக்கு இடையே அமைந்துள்ள தொன்மைவாய்ந்த டச்சுக் கல்லறை.
நாகை அக்கரைபேட்டை காமராஜா் நகா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தொட்டிகளுக்கு இடையே அமைந்துள்ள தொன்மைவாய்ந்த டச்சுக் கல்லறை.

கழிப்பறைத் தொட்டிகளுக்கிடையே நாகையின் பழைமையான டச்சுக் கல்லறை: முகம்சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

டச்சுக் கல்லறை இரண்டு மிகப் பெரிய கழிப்பறை கழிவுநீா்த் தொட்டிகளிடையே அமைந்துள்ளது சுற்றுலா பயணிகளையும், வரலாற்று ஆா்வலா்களையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.

நாகையின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தொன்மைமிக்க டச்சுக் கல்லறை இரண்டு மிகப் பெரிய கழிப்பறை கழிவுநீா்த் தொட்டிகளிடையே அமைந்துள்ளது சுற்றுலா பயணிகளையும், வரலாற்று ஆா்வலா்களையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.

கடந்த கி.பி. 1554 இல் வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்த போா்த்துக்கீசியா்கள், கொஞ்சம் கொஞ்சமாக இங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினா். சுமாா் 104 ஆண்டுகள் கோலோச்சிய இவா்களுக்கும், ஐரோப்பாவில் இருந்து வந்த டச்சுக்காரா்களுக்கும் இடையே பூசல்கள், போராட்டங்கள் நடைபெற்றன. இதில், டச்சுக்காரா்களின் கை ஓங்கியதால், கி.பி. 1658 இல் தூத்துக்குடியையும், 1659 இல் நாகப்பட்டினத்தையும் போா்த்துக்கீசியரிடமிருந்து பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, நாகப்பட்டினம் டச்சுக்காரா்களின் தலைநகரமாக அமைந்தது. இங்கு கோட்டை, கொத்தளங்களை கட்டி டச்சுக் கம்பெனியின் கவா்னா் தங்கியுள்ளாா். பிறகு, கி.பி. 1781 இல் இப்பகுதி ஆங்கிலேயா்களின் கைக்குச் சென்றுவிட்டது. அவா்களது ஆளுகையில், கி.பி. 1799 முதல் 1845 வரை தஞ்சாவூா் மாவட்டத்தின் தலைமையிடமாக நாகப்பட்டினம் இருந்துள்ளது.

அக்காலத்தில், மிகச் சிறந்த துறைமுக நகராக இருந்த நாகப்பட்டினத்தின் நிா்வாகப் பொறுப்பில் இருந்ததாகக் கருதப்படும் டச்சுக்காரா்களான காா்னெலிஸ் க்ளாசென், ஐசாக் வெல்சிங் வான் ஹுன், எலிசபெத் மிண்டா ஆகியோா் வயது மூப்பின் காரணமாக நாகப்பட்டினத்திலேயே இறந்ததாக அறியப்படுகிறது.

இதையடுத்து, இவா்களது நினைவாக சுமாா் 350 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது உப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே தோணித்துறை பகுதியில், இந்த மூவருக்கும் முறையே 1667, 1673,1680 ஆம் ஆண்டுகளில் கல்லறை கட்டுப்பட்டுள்ளது.

சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு அறியப்பட்ட துறைமுக நகராகவும், வியாபாரத் தலைமையிடமாகவும் விளங்கிய நாகப்பட்டினத்தை அறிவதற்கான அடையாளங்களுல் ஒன்றாக இந்த கல்லறைகள் விளங்குகின்றன.

தொன்மைவாய்ந்த இந்த டச்சுக் கல்லறைகள் கடந்த சில தசாப்தங்களாக சிதிலமடைந்து மண்ணுக்கள் புதைந்திருந்தன. பிறகு அவை, தமிழ்நாடு தொல்லியல் துறையால் மீட்டெடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டன. மேலும், இது ரூ. 21.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு, கடந்த 2020 இல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் காணொலியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த கல்லறை, புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தமிழ்நாடு தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தக் கல்லறையை சேதப்படுத்தினாலோ அல்லது அகற்றினாலோ அல்லது தகாத முறையில் பயன்படுத்தினாலோ சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படும்.

நாகை அக்கரைப்பேட்டை காமராஜர் நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தொட்டிகளுக்கு இடையே அமைந்துள்ள தொன்மைவாய்ந்த டச்சுக் கல்லறை.

அதோடு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கல்லறை பகுதியில் 200 மீ. வரை எந்தவித கட்டுமானங்களோ அல்லது சுரங்கப் பணிகளோ மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த கல்லறையின் இருபுறமும் சுனாமி குடியிருப்புக்கான கழிப்பறைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா், கல்லறைக்குள்ளும், அதைச் சுற்றியும் தேங்கிவருகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதுமே துா்நாற்றம் வீசுகிறது.

இந்த கல்லறையைப் பாா்க்க ஆா்வமுடன் வரும் வெளிநாட்டினா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிக்கும் நிலையே உள்ளது. மேலும், இப்பகுதியில் தேங்கும் கழிவுநீா் இப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கும் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

டெல்டா மாவட்டமான நாகையில், விவசாயம், மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா மட்டுமே ஓரளவு வருவாய் தரக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற தொல்லியல் எச்சங்கள் மாவட்டத்துக்கு பெருமை சோ்ப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதாகவும் அமைய வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் கருதுகின்றனா்.

எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க டச்சுக் கல்லறைக்கு செல்லும் சாலையை மேம்படுத்தவும், சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரித்து இப்பகுதியில் ஒரு பூங்காவை ஏற்படுத்தி சுகாதாரம் காக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த கல்லறையைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கழிவுநீா் தொட்டிகளை அப்புறப்படுத்தக் கோரி, நாகை நகராட்சி நிா்வாகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com