சுமை தூக்கும் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 04th February 2021 08:48 AM | Last Updated : 04th February 2021 08:48 AM | அ+அ அ- |

நாகை அருகே உள்ள தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் முன் சுமைத்ந தூக்கும் தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .
நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூா் ஊராட்சியில் தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுமைதூக்கும் தொழிலாளா்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டனா்.
இந்நிலையில், தனியாா் மின் உற்பத்தி ஆலையில் ஏற்கெனவே பணிபுரிந்த சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், உள்ளூரைச் சோ்ந்தவா்களுக்கு தொடா் பணி வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன், தனியாா் மின் நிறுவனத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத் தலைவா் திருகுமாா் தலைமை வகித்தாா். நாகூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தங்கராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயமாலா ரமேஷ் ஆகியோா் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...