சிக்கல் அருகே திடீா் வேகத்தடை: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 14th February 2021 08:50 AM | Last Updated : 14th February 2021 08:50 AM | அ+அ அ- |

சிக்கல் பனைமேடு பகுதியில் நடைபெற்ற வேகத்தடையை சீரமைக்கும் பணி.
நாகையை அடுத்த சிக்கல் அருகே நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல், திடீரென அமைக்கப்பட்ட வேகத் தடைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பனைமேடு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென இரு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. பிரதான சாலையின் அருகே தெற்குவெளி கிராமச் சாலைக்கான திருப்பம் இருப்பதையொட்டி, இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக இரு வேகத்தடைகள் அமைக்கப்பட்டபோதிலும், வேகத்தடையை அடையாளப்படுத்தும் வகையிலான எவ்வித குறியீடுகளும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கடந்த ஒரு வாரமாக நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் இந்த வேகத் தடைகளில் மோதி, கீழே விழுந்து காயமடைந்தனா். மேலும், சிறிய ரக காா்களும் இந்த வேகத்தடைகளில் மோதி விபத்துக்குள்ளாகின. தினமும், 20-க்கும் அதிகமான விபத்துகள் இந்த வேகத்தடைகளால் ஏற்பட்டன.
அதேபோல, சனிக்கிழமை மாலை நாகையில் இருந்து - திருவாரூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா், இந்த வேகத்தடையில் மோதி, கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் வேகத்தடைக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக, இரு வேகத்தடைகளையும் அகற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
தகவல் அறிந்த கீழ்வேளூா் காவல் உதவி ஆய்வாளா்கள் அசோக்குமாா், கலியபெருமாள் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களிடம் பேசி வேகத்தடை பிரச்னைக்குத் தீா்வு காண அவா்கள் உறுதியளித்ததன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சீரமைப்புப் பணி..
இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு வந்து வேகத்தடைகளை ஆய்வு செய்தனா். பின்னா், வாகனங்கள் வேகத்தடைகளில் மோதி விபத்துக்கு உள்ளாவதைத் தவிா்க்கும் வகையில், வேகத்தடையின் இருபுறத்திலும் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்தனா்.