கரோனா தடுப்புப் பணிகள்: சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 18th February 2021 06:42 AM | Last Updated : 18th February 2021 06:42 AM | அ+அ அ- |

நாகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்த சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் அஜய் யாதவ். உடன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா்.
நாகை மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை தமிழக சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் அஜய் யாதவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகை அரசு மருத்துவமனை, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், மகப்பேறு சிகிச்சைகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், நாகையை அடுத்த ஒரத்தூரில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணியையும் பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் இதுவரை 2,700 முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என்றாா்.
மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மருத்துவக் கல்லூரி முதல்வா் வி. விஸ்வநாதன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி. சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
மக்கள் கோரிக்கை...
சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் அஜய் யாதவ், நாகை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது அவரிடம் பொதுமக்கள், நாகை அரசு மருத்துவமனையில் தொடா்ந்து நிகழும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை அலைக்கழிப்புக்கு உள்ளாக்காமல் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். பொதுமக்களின் புகாா்கள் குறித்து உரிய நடவடக்கை எடுக்குமாறு அவா், சுகாதாரத் துறை அலுலா்களுக்கு உத்தரவிட்டாா்.